பண்ருட்டி அருகே ரூ.2½ கோடி எடுத்துச் செல்லப்பட்ட வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வங்கி காசாளர் உள்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
பண்ருட்டி, நெய்வேலி இந்திரா நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து ரூ.2½ கோடியுடன் உள்ள பணப்பெட்டியை வங்கி ஊழியர்கள் 4 பேர் வேனில் ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி புறப்பட்டனர். வேனை சென்னை திருவான்மியூரை சேர்ந்த அசோக்(வயது 26) என்பவர் ஓட்டினார்.
பண்ருட்டி அருகே முத்தாண்டிக்குப்பம் மெயின்ரோட்டில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வங்கி காசாளர் சென்னை மாங்காடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, வங்கி உதவியாளர்கள் சென்னை பூந்தமல்லியை சேர்ந்த ஓம்பிரகாஷ்(34), தாம்பரத்தை சேர்ந்த பொன்னுரங்கம்(48), பாதுகாவலர் அரவிந்த்குமார், டிரைவர் அசோக் ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர்.
விபத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் முத்தாண்டிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இதனிடையே விபத்து பற்றி அறிந்த போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரூ.2½ கோடி பணப்பெட்டியை மாற்று வாகனம் மூலம் சென்னைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்குள்ளான வேன் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.