0 0
Read Time:3 Minute, 17 Second

திட்டக்குடி அருகே, உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் மனைவி கண்ணகி. இவர் தனது மாமியார் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கண்ணகி தனக்கு சொந்தமான பசுமாடு கன்று போடும் நிலையில் இருந்ததால் அவர் இரவில் வீட்டின் கதவை திறந்து வைத்தபடி உறங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் 3 மர்ம நபர்கள் திடீரென கண்ணகியின் வீட்டில் நுழைந்து அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த கண்ணகி கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைப்பார்த்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

ஆனால் பொதுமக்கள் அவர்களை விடாது பின்னால் துரத்தி சென்றனர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். பின்னர் அவரை தெருவில் உள்ள கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதுபற்றிய தகவல் அறிந்து ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த மர்ம நபரை மீட்க முயன்றபோது, தப்பி ஓடிய 2 பேரையும் பிடித்து வாருங்கள் என்று கூறி அந்த மர்ம நபரை ஒப்படைக்க மறுத்தனர். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிடிபட்ட மர்ம நபரை அங்கிருந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் ஆவினங்குடி அருந்ததியர் தெருவை சேர்ந்த முனியன் மகன் சுப்பிரமணியன்(வயது 27) என்பதும், கண்ணகியிடம் நகை பறிக்க முயன்றதும், பல்வேறு திருட்டு சம்பவங்களில் தொடர்பு உடையவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 2 மர்ம நபர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள். திட்டக்குடி பகுதியில் திருட்டு சம்பவம் தொடர்ச்சியாக அரங்கேறி வந்த நிலையில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %