விருத்தாசலம், கடலூர் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரசு பஸ் ஒன்று புறப்பட்டு குப்பநத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் பாலக்கரையில் பஸ் நின்றபோது விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர்கள் பஸ்சில் ஏறினர்.
இதைப்பார்த்த பஸ் கண்டக்டர் குமார் பஸ்சில் ஏறிய பூதாமூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் இருவரை கீழே தள்ளி விட்டதாக தெரிகிறது.
இவர்களில் ஒரு மாணவனின் சட்டை பஸ் படிக்கட்டில் உள்ள கம்பியில் சிக்கி கிழிந்தது. இதனால் கண்டக்டர் குமாருக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் அந்த பஸ் அங்கிருந்து விருத்தாசலம் போலீ்ஸ் நிலையம் அருகில் வந்தபோது பஸ்சில் இருந்த மாணவர்கள் பஸ்சை நிறுத்துமாறு கூறினர். உடனே டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தினார்.
பின்னர் கண்டக்டர் நடந்து கொண்ட விதம் குறித்து மாணவர்கள் விருத்தாசலம் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாணவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்த போலீசார் பஸ் கண்டக்டர் குமாரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த போலீசார் பஸ் கண்டக்டரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.