10 ஆண்டுகளில் அதிமுக செய்யாததை 10 மாதங்களில் செய்த திமுக – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சட்டம் – ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் தொழிற்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் கே.பி.முனுசாமி, அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை காகிதக் கப்பல் என்று குறிப்பிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக செய்யாததை, 10 மாதங்களில் திமுக அரசு செய்துள்ளதாக கூறினார்.
கடந்த 10 மாதங்களில் 69 ஆயிரத்து 375 கோடி ரூபாய் மதிப்பில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் தொழிற்துறை வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், தொழிற்துறையின் பயன் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற முனைப்பில் அனைவரும் பணியாற்றி வருவதாகவும், அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் தமிழ்நாடு என்று பத்திரிக்கைகள் பாராட்டு தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கத் தூதரகமும், தமிழ்நாடு தொழில்துறையை பாராட்டியுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர், சட்டம் – ஒழுங்கு சரியாக இருந்தால் தான் முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்கள் முன்வருவார்கள் என குறிப்பிட்டார். மேலும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சி இருந்தால் தான், அங்கு சட்டம் – ஒழுங்கு சரியாக இருக்கும் என தெரிவித்த முதலமைச்சர், அதற்கான நடவடிக்கைகளை அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாக கூறினார். மேலும், சிறப்பாக செயல்பட்டு வரும் தொழிற்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்த முதலமைச்சர், தொழிற்துறை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவோம் என சூளுரைத்தார்.