மயிலாடுதுறையில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில், திருவையாறில் நடைபெறும் சப்தஸ்தான பெருவிழா போன்று ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சப்தஸ்தான பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டிற்கான சப்தஸ்தான பெருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7 ஊர் சாமிகள் ஒரே இடத்தில் எழுந்தருளும் சப்தஸ்தான விழா நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதனையொட்டி ஐயாறப்பர் கோவிலில் இருந்து ஐயாறப்பர் பஞ்சமூர்த்திகளுடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி ஊர்வலமாக மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர், சோழன்பேட்டை அழகியநாதர், கூறைநாடு புனுகீஸ்வரர், சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர், திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர், மயிலாடுதுறை மாயூரநாதர் ஆகிய கோவில்களின் உற்சவ மூர்த்திகளுடன் மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் ஒரே இடத்தில் எழுந்தருளினர்.
பின்னர், அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் காட்சி கொடுக்கும் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து அங்கு அனைத்து சாமிகளுக்கும் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் பட்டு அணிவித்து வழிபாடு செய்தார்.
பின்னர் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சப்தஸ்தான பெருவிழாவை முன்னிட்டு கண்கவர் வாணவேடிக்கை நடைபெற்றது.