சீர்காழி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சீர்காழி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சீர்காழி வட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரா முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் ஜெயக்குமார் வரவேற்று பேசினார்.
போராட்டத்தில், மாநில துணைத் தலைவர் கணேசன், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாநில அளவில் நிலுவையில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும். காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர், ஊராட்சி செயலர் மற்றும் வன காவலர்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850-ஐ மாநில அரசும் வழங்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை 2003-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் அமர்த்தப்பட்ட அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் துரை நடராசன் நன்றி கூறினார்.