பெண்ணாடம் அருகே, தாழநல்லூர் கிராமத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரியை தனிநபர்கள் சிலர் வேலி அமைத்து ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். மேலும் சிலர் வீடுகள் கட்டியும் வசித்து வந்தனர்.
இதனால் மழைக்காலங்களில் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து நில அளவீடு செய்யப்பட்டு ஏரியை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் தாங்களே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளவில்லை. இந்த நிலையில் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் தலைமையில் அதிகாரிகள் ஏரிக்கு சென்றனர்.
பின்னர் அவர்கள் ஏரி ஆக்கிரமிப்புகளை முதல் கட்டமாக பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வளர்மதி, பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் சாந்தி, சர்வேயர் சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் மணிவிளக்கு பழனிவேல், துணை தலைவர் தேன்மொழிபாபு மற்றும் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் உள்பட பலர் உடன் இருந்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.