கூத்தாநல்லூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் குதிரைகளை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள, கூத்தாநல்லூர் சாலை, லெட்சுமாங்குடி சாலைகளில் கடந்த சில மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட குதிரைகள் சுற்றித்திரிகின்றன.
இவ்வாறு சுற்றித்திரியும் குதிரைகள் சாலையின் நடுவில் நின்று கொண்டு சாலை மறியல் செய்வது போல நிற்பதும், படுத்து தூங்குவதுமாக இருந்து வருகிறது. சாலையில் நின்று கொண்டிருக்கும் குதிரைகளில் சில குதிரைகள் திடீரென வெறி பிடித்தது போல சாலையில் அங்கும் இங்குமாக ஓடுகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் காயமடைகிறார்கள். குறிப்பாக துள்ளி குதித்து ஓடும் குதிரைகள் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை எட்டி உதைத்து கீழே தள்ளி விடும் நிலையும் உள்ளது.
இத்தகைய குதிரைகள் கடைகளில் வைக்கப்பட்ட பொருட்களையும் சூறையாடி தின்று விடுகிறது. மாடுகளை போல குதிரைகளை அவ்வளவு எளிதாக விரட்ட முடியவில்லை. பகல் மட்டுமின்றி இரவிலும் சாலையின் நடுவே குதிரைகள் படுத்து தூங்குவதுதால் போக்குவரத்துக்கு மிகுந்த இடையூறு ஏற்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரியும் குதிரைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.