தமிழ்நாடு முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் நேற்று மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் மேல் ஒரு மணி நேரத்திற்கு 20 தடவைக்கும் அதிகமான முறை தொடர் மின் வெட்டு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களான காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் முதல் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நேற்று மாலை 6 மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கானை, சிறுவந்தாடு, உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.தொடர் மின்வெட்டை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும்தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.