திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும், கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சியில் மனு அளிக்கப்பட்டது.
இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 13-வது வார்டு கவுன்சிலர் தனபால், 14-வது வார்டு கவுன்சிலர் சுரேந்தர் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள், நகராட்சி அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து குடிநீர் வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் நகராட்சி நிர்வாகம் செவிடாக இருப்பதாக கூறி சங்கு ஊதி அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அல்வா கொடுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.