வைத்தீஸ்வரன் கோவில் வயல் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் மயிலாடுதுறை சாலை பகுதியில் விளைநிலங்கள் உள்ளன. இங்குள்ள வயல்வெளி பகுதியில் மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
ஆனால், வயல்வெளி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் பல இடங்களில் சாய்ந்தும், மின் கம்பிகள் தாழ்வாகவும் செல்கின்றன. அதாவது கைக்கு எட்டும் தூரத்தில் மின்கம்பிகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், வயல்களில் விவசாய பணிகளை மேற்கொள்ளும் போதும், அறுவடை செய்யப்பட்ட விவசாய பயிர்களை தலைச்சுமையாக தூக்கிக் செல்லும்போதும் விபத்துகள் ஏற்படுகின்றன.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் சிலர் கூறுகையில், வயல்வெளி பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று மின்துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், வைத்தீஸ்வரன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளிக்க செல்லும் போது தாழ்வாக உள்ள மின் கம்பிகளால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே, வயல்வெளி பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.