சென்னை, மாநகராட்சி ஆலந்தூர் 12-வது மண்டலத்துக்கு உட்பட்ட நங்கநல்லூர் எஸ்.ஐ.பி. காலனி- ஈஸ்வரன் காலனி 2-வது தெரு சந்திப்பில் உள்ள 7 கிரவுண்டு அரசு நிலத்தை சிலர் போலியான ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி நடப்பதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதையடுத்து ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜசேகர், கவுன்சிலர் துர்காதேவி நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அதில் அந்த நிலம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில் போலியான ஆவணங்கள் மூலம் சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பது உறுதியானது. இதையடுத்து ஆலந்தூர் தாசில்தார், பத்திரப்பதிவு பதிவாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்தநிலையில் ரூ.25 கோடி மதிப்புள்ள 7 கிரவுண்டு நிலத்தை மண்டல குழு தலைவர் மற்றும் மாநகராட்சி செயற்பொறியாளர் ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி ஊழியர்கள் மீட்டு, அந்த இடத்தில் “இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம்.
இங்கு அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை பலகை வைத்தனர். கோர்ட்டு வழக்கு முடிந்த பிறகு அந்த இடத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.