முத்துப்பேட்டையை அடுத்த கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது33). மீனவர். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், விஷாலினி (10), யாழினி (7) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். நேற்று சந்திரசேகரன் முனாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து அந்த பகுதி மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றார்.
அப்போது லகூன் அருகே உள்ள மேல கடைசி தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த சந்திரசேகரன் திடீரென தவறி கடலில் விழுந்தார். இதனை பார்த்ததும் உடன் சென்ற மீனவர்கள் அவரை தேடினர். அப்போது அவர் கடலில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து சக மீனவர்கள் முத்துப்பேட்டை போலீசார் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை கடலோர காவல் பாதுகாப்பு குழும ஆய்வாளர் ராஜேந்திரன், உதவி ஆய்வாளர் ரகுபதி, மீன்வளத்துறை சார் ஆய்வாளர் தர்மதுரை மற்றும் முத்துப்பேட்டை போலீசார், மீனவர்கள் உதவியுடன் கடலில் மூழ்கி இறந்த சந்திரசேகரன் உடலை படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.