தரங்கம்பாடி, ஏப்.21: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே திருவிடைகழி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் பாலஸ்தாபனம் சிறப்பு யாக பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி என்ற ஊரில் புகழ்பெற்ற சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழ் கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் உள்ளிட்ட நூல்களில் திருவிடைகழி பற்றி பாடப்பட்டுள்ளது. சேந்தனார் பெருமானால் பாடப்பட்ட திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகிய நூல்கள் இந்த ஆலயத்தில் இருந்து இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
முசுகுந்த சக்கரவர்த்தியால் ஏற்படுத்தப்பட்ட இந்த ஆலயம், சூரபத்மனின் இரண்டாவது மகன் ஹிரண்யாசுரணை கொன்ற பாவம் நீங்க குரா மரத்தடியில் முருகப்பெருமான் சிவபூஜை செய்து பாவ விமோசனம் பெற்ற இடம் என்று தலபுராணம் கூறுகின்றது. பண்டைய தமிழ் நூல்களில் குராவடி என்ற பெயரில் வழங்கப்படும் இந்த ஆலயம், முருகனுக்கு உரிய பாவம் கழிந்ததால், திருவிடைக்கழி என்று அழைக்கப்படுகிறது.
இக்கோயிலில் திருவிடைக்கழி முருகன், சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக வீற்றிருக்கிறார். சூரபத்மனை முருகன் கொன்றார். சூரபத்மனின் மகனான இரண்யாசுரன், முருகனுக்கு பயந்து தரங்கம்பாடி கடலுக்குள் ஒளிந்தான். சிவபக்தனான அவனையும், பராசக்தியின் அருளால் முருகன் கொன்றார். அசுரனாக இருந்தாலும், சிவபக்தனைக் கொன்றதால் முருகனுக்கு பாவம் உண்டானது. அதைப் போக்க இங்குள்ள குராமரத்தின் அடியில் தவமிருந்தார். இதனால் ‘திருக்குராவடி’ என இத்தலத்திற்கு பெயர் வந்தது. முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார். சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும், இடதுகை தொடையில் வைத்தபடி உள்ளன. கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்திலும், மற்றொரு லிங்கம், முருகனின் முன்புறமும் உள்ளது. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது, முருகன் பூஜித்த பத்ரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும். குராமரத்தின் அடியில் தியானம் செய்ய மனத்தெளிவு, அறிவுக்கூர்மை உண்டாகும். சரவண தீர்த்தம், கங்கை கிணறு என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன. ஏழுநிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. இக்கோவிலில் வந்து தரிசித்தால் திருமணத் தடைகள் மற்றும் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
ஆடி தை மாதங்களில் இந்த ஆலயத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். தமிழகத்தின் புகழ்பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றான இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடைபெற்று 19 ஆண்டுகள் கடந்த நிலையில் நிகழாண்டு கோயில் கும்பாபிஷேகம் ஆவணி மாதம் நடைபெற உள்ளதால் பாலஸ்தாபனம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் நந்தகுமார், ராஜேஷ் உள்ளிட்ட குருக்கள் கலந்துகொண்டு முருகப்பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள், மற்றும் பால் ,சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது.
இதில் பரம்பரை அறங்காவலர் ஜெயராமன், செயல் அலுவலர் ரம்யா, ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா நாகராஜன், மற்றும் கிராம வாசிகள், கோவில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.