0 0
Read Time:4 Minute, 53 Second

காதலியை பலாத்காரம் செய்து திருமணம் செய்ய மறுத்த டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணின் தந்தையும், புதுப்பாளையம் லோகாம்பாள் கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணனும் அரசு போக்குவரத்து கழகத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். இதனால் 2 வீட்டாரும் நெருங்கி பழகி வந்தனர். அப்போது அந்த இளம்பெண்ணும், பாலகிருஷ்ணன் மகன் கார் டிரைவரான பிரவீன்குமார் (32) என்பவரும் நண்பர்களாக பழகினர்.

இதற்கிடையில் கடந்த 2004-ம் ஆண்டு சுனாமி தாக்கிய போது, அந்த இளம்பெண்ணின் வீடு சேதமடைந்தது. இதனால் அவர்கள் குடும்பத்தோடு லோகாம்பாள் தெருவில் பாலகிருஷ்ணன் வீட்டு மாடியில் குடியிருந்தனர். அப்போது பிரவீன்குமார், அந்த இளம்பெண்ணிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அவரும் அந்த காதலை ஏற்று, இருவரும் பீச், பூங்கா என சுற்றித்திரிந்துள்ளனர்.

அதன்பிறகு கடந்த 2010-ம் ஆண்டு அந்த இளம்பெண்ணின் வீடு சீரமைக்கப்பட்டு, அவர்கள் தேவனாம்பட்டினம் சென்று விட்டனர். இருப்பினும் பிரவீன்குமார் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் வேலை பார்த்து வந்த கணினி மையத்தை குத்தகைக்கு எடுப்பதாக பிரவீன்குமார் கூறியதன் பேரில், அவர் வைத்திருந்த 50 பவுன் நகைகளை அவரிடம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 17.1.2018 அன்று, அந்த இளம்பெண்ணின் பெற்றோர் வீட்டில் இல்லாத நிலையில், பிரவீன் குமார் அந்த இளம்பெண் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்த அவரிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளம்பெண் கேட்டதற்கு அவர் மறுத்ததோடு, வேறு பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன். நான் பலாத்காரம் செய்ததை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதையடுத்து பிரவீன்குமார் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது பற்றி அறிந்ததும் 2.9.2018 அன்று அந்த இளம்பெண், அவரது வீட்டுக்கு சென்று கேட்டார். இதை பார்த்த பிரவீன்குமார், அவரது தாய் நிர்மலா (58), தந்தை பாலகிருஷ்ணன் (68), அண்ணன் பிரசன்னகுமார் (35) ஆகிய 4 பேரும் அந்த இளம்பெண்ணை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, தாக்கி வெளியே தள்ளியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் இது பற்றி கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், இவ்வழக்கில் பிரவீன்குமார் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.45 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் அந்த இளம்பெண்ணை தாக்கிய பாலகிருஷ்ணன், நிர்மலா, பிரசன்னகுமார் ஆகிய 3 பேருக்கும் தலா 3 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வளர்மதி ஆஜராகி வாதாடினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %