மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் இரவு 10.30 மணி அளவில் அவர் ரோந்து சென்றபோது சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அவருடன் யாரும் செல்லவில்லை. அந்த நேரத்தில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றதால் சந்தேகம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் அந்த பெண்ணை அழைத்து நீங்கள் யார்?, எதற்காக இந்த நேரத்தில் தனியாக நடந்து செல்கிறீர்கள்? என்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அந்த பெண் கடலூர் அண்ணா நகரை சேர்ந்தவர் என்பதும், அவரது பெற்றோர் இறந்து விட்டதால் தனது அண்ணனின் பாதுகாப்பில் இருந்து வந்ததும், போதிய வருமானம் இல்லாததால் வேலை தேடி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியாக தஞ்சாவூர் வந்ததும் தெரிய வந்தது.
தஞ்சாவூரில் அவருக்கு வேலை கிடைக்காததாலும், கையில் பணம் இல்லாததாலும் பசியோடு நடந்தே கடலூருக்கு திரும்பி செல்வதற்காக சீர்காழி பகுதிக்கு நடந்து வந்ததும் தெரிய வந்தது.
அந்த பெண் கூறியதை கேட்டதும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், உடனடியாக அந்த பெண்ணுக்கு உணவு வாங்கி கொடுத்து அவரது பசியை போக்கினார். பின்னர் அந்த பெண்ணிடம் இரவு நரத்தில் தனியாக நடந்து செல்வது பாதுகாப்பாக இருக்காது என்று கூறி கடலூருக்கு பஸ்சில் செல்லுமாறு அறிவுரை கூறியதுடன் பஸ் செலவிற்கு பணம் கொடுத்து கடலூருக்கு பஸ்சில் ஏற்றி பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்.
சரியான நேரத்தில் அந்த பெண்ணுக்கு உதவிய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரின் இந்த மனிதாபிமான செயலை அறிந்த பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டினர்.