வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் 2 சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த முயல்வதும் சரியான நேரத்தில் போலீசார் கண்டுபிடித்து இந்த கடத்தலை தடுத்து நிறுத்தி இதில் தொடர்புடையவர்களை கைது செய்யும் சம்பவங்களும் சமீப காலமாக அடிக்கடி நடந்து வருகிறது.
இந்த நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த நெய்விளக்கு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரண்டு கார்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.
அந்த கார்களில் பண்டல், பண்டலாக கஞ்சா இருந்தது தெரிய வந்தது. மொத்தம் 64 பண்டல்களில் 147 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது. இந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வேதாரண்யம் வழியாக கார்களில் கடத்தி வரப்பட்டு பின்னர் வேதாரண்யத்தில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து காரில் மறைத்து வைத்திருந்த 147 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட வேதாரண்யம் தாலுகா கோவில்பத்து பகுதியை சேர்ந்த சரபோஜி, நாகையை சேர்ந்த இளமாறன், மதுரையை சேர்ந்த பரமன், உசிலம்பட்டியை சேர்ந்த ராஜா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் வேதாரண்யம் போலீஸ் நிலையத்துக்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மற்றும் சொகுசு கார்களை பார்வையிட்டார். இதுகுறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.