நாகையில் ரூ.12 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
நாகை பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் மூலதன மானிய நிதி ரூ.12 கோடியில் வடிகால் அமைக்கும் பணியை நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், நாகை நகராட்சி பகுதியில், மழை காலங்களில் வடிகால் வாய்க்காலில் தேங்கும் நீர் வெளியேற வழி இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதற்கு தீர்வு காணும் வகையில் நகராட்சி பகுதியில் வடிகால் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், நாகை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.12 கோடி மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால், மழை காலங்களில் மழைநீர் எளிதில் வடிந்து விடும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நாகை நகராட்சி தலைவர் மாரிமுத்து, துணை தலைவர் செந்தில்குமார், ஆணையர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.