தமிழ்நாட்டிற்கான மின்சார தேவை எவ்வளவு?… மின்உற்பத்தி மற்றும் மின்பற்றாக்குறை எவ்வளவு என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 16,500 மெகாவாட் முதல் 17,000 மெகாவாட் வரை மின் தேவை இருக்கிறது. தமிழ்நாட்டின் மின் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 12 ஆயிரத்து 800 மெகாவாட் முதல் 13 ஆயிரத்து 100 மெகாவாட் ஆக இருக்கிறது. நிலக்கரியை பொறுத்தவரையில் நாள் ஒன்றுக்கு 72 ஆயிரம் டன்னும் மாதத்திற்கு 23 லட்சம் டன்னும் தமிழ்நாட்டிற்கு தேவைப்படுகிறது. மத்திய தொகுப்பிலிருந்து நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது.
இதனால் நாள் ஒன்றுக்கு 22 ஆயிரம் டன் நிலக்கரி பற்றாக்குறை ஏற்படுகிறது. நிலக்கரி பற்றாக்குறையால் தூத்துக்குடி, எண்ணூர், மேட்டூர் அனல் மின் நிலையங்களில் முழு மின் உற்பத்தி செய்வது கேள்விக்குறியாகியுள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் காற்றாலைகள் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில், கடந்த 18-ம் தேதி 312 மில்லியன் யூனிட்டாக இருந்த மின் நுகர்வு, 21 ஆம் தேதி 363 மில்லியன் யூனிட்டாக உயர்ந்துள்ளது.
அதேசமயம், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வரவேண்டிய 796 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. மின் பற்றாக்குறையை போக்க குறைந்த விலையில் 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மின் தடை ஏற்பட்ட இடங்களில் மாற்று வசதிகளின் மூலம் உடனடியாக மின்சாரம் வழங்கப்பட்டதாக மின்சாரவாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில்தான் தமிழ்நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான நிலக்கரி கிடைப்பதற்கு உதவுமாறு பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.