மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் ரயில்வே கேட் அருகில் மணல்மேடு சாலையில் குடியிருப்பு பகுதியில் தனியார் பட்டாசு கடை இயங்கி வருகிறது.
இந்த கடையில், நாட்டு வெடிகள் மற்றும் அதனை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வைத்தீஸ்வரன் கோவில் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வெடிக்கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த கடையில் பயங்கர சத்தத்துடன் வெடிக்கக் கூடிய 50 கிலோ நாட்டு வெடிகள் மற்றும் அந்த வெடிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், மூட்டை, மூட்டையாக பட்டாசுகள் ஆகியன பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் மின் நகரை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 42), சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (47), பழனிச்சாமி (40), மயிலாடுதுறை கூறைநாடு பகுதியை சேர்ந்த மகேஷ் குமார் (42) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.