மயிலாடுதுறையில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 150 கிலோ எலுமிச்சை பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மயிலாடுதுறை பகுதியில் விற்பனை செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று மயிலாடுதுறை காய்கறி மார்க்கெட் பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான குடோனில் எலுமிச்சை காய்களை பழுக்க வைப்பதற்காக அதன் நடுவே கார்பைட் கற்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 150 கிலோ எலுமிச்சை பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், குடோன் உரிமையாளர் ரவிச்சந்திரனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் சீனிவாசன் கூறுகையில், எலுமிச்சை மற்றும் மாங்காய்களை பழமாக மாற்றுவதற்கு கார்பைட் கற்களை சிலர் பயன்படுத்துகின்றனர். கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களை நாம் உட்கொள்ளும் போது உடலில் கேடு ஏற்படும். இவ்வாறு செய்வது தவறாகும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.