மந்தாரக்குப்பம் அருகே, உள்ள சிவாஜி நகர், திருவள்ளுவர் நகர், ஐ.டி.ஐ.நகர், பட்டையர் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என்.எல்.சி. நிறுவனத்தின் மூலமாக குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வீடுகள் மட்டுமின்றி தபால் அலுவலகம், பள்ளிக்கூடம் ஆகியவற்றிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. மேலும் நாள் ஒன்றுக்கு 20 நிமிடத்திற்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை 10 மணியளவில் மந்தாரக்குப்பம் பகுதியில் இருக்கும் என்.எல்.சி.யின் குடிநீர் மற்றும் மின்சாரம் வழங்கும் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். அவர்களுடன் அந்த பகுதியில் உள்ள தபால் அலுவலக ஊழியர்களும் கலந்துகொண்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் மந்தாரக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்துககு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தபால் அலுவலகம் இங்கு செயல்பட வேண்டுமா? வேண்டாமா? என தபால் ஊழியர்கள் கூறினர்.
இதையடுத்து என்.எல்.சி. அதிகாரிகளிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் எங்கள் உயர் அதிகாரிகளிடம் பேசி தகவல் தெரிவிக்கிறோம் என கூறினர். பின்னர் தபால் நிலையம், ரேஷன் கடைக்கு மட்டும் மின்வினியோகம் செய்யப்பட்டது.
அதன்பின் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் மற்றும் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று எண்ணி பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.