ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்டு கட்சியின் இடது தொழிற்சங்க மய்யம் சார்பில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் செல்லதுரை, இடது தொழிற்சங்க மைய மாவட்ட பொறுப்பாளர் மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் சண்முகவேலு கலந்துகொண்டு பேசினார். நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். திறந்தவெளி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை மழையில் நனைய விடாமல் குடோன்களுக்கு எடுத்து செல்ல வேண்டும்.
கிராமப்புறம், நகர்ப்புறம் என பிரித்து ரேஷன் பொருட்கள் வழங்கக்கூடாது. கிராமப்புறம், நகர்ப்புறம், மலைவாழ் மக்கள் அனைவருக்கும் ஒரே ரக தரமான அரிசி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட பொறுப்பாளர் வீரசெல்வன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.