சீர்காழி புதிய பஸ்நிலையம் எதிரில் தமிழக அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த உழவர் சந்தையில் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்கள் பகுதியில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து காலை முதல் மதியம் 12 மணி வரை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த உழவர் சந்தைக்கு சீர்காழி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வந்து தங்களுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்தநிலையில், கடந்த சில நாட்களாக உழவர் சந்தை முன்பு சாலையோரம் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட கடைகள் போடப்படுவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. உழவர் சந்தையின் உள்ளே கடை அமைத்திருக்கும் விவசாயிகள் வியாபாரமின்றி சிரமப்படுகின்றனர்.
எனவே, உழவர் சந்தை முன்பு சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக அமைக்கப்படும் கடைகளை அகற்றவும், அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.