மணல்மேட்டை அடுத்த பாப்பாகுடி பகுதியில், கொள்ளிடம் ஆற்றில் இருந்து சிலர் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக 4 மாட்டு வண்டிகள் வந்து கொண்டிருந்தன. போலீசாரை கண்டதும் மாட்டு வண்டிகளை அங்கேயே நிறுத்தி விட்டு அதனை ஓட்டி வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். அதனைத்தொடர்ந்து அந்த மாட்டு வண்டிகளில் போலீசார் சோதனையிட்டபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
அதன்பேரில், அந்த மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், தப்பி ஓடியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள், இலுப்பைபட்டு பகுதியை சேர்ந்த கலியமூர்த்தி மகன் ராஜேஷ் கண்ணா, சோனை மகன் சங்கர், கலியமூர்த்தி மகன் இளவரசன், திருவாளப்புத்தூரை சேர்ந்த சின்னதுரை மகன் கார்மேகம் என்பது தெரிய வந்தது.
பின்னர் அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவா்களை தேடி வருகின்றனர்.