மயிலாடுதுறையில், ம.தி.மு.க. மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமை தாங்கினார்.
அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் மகாலிங்கம், கொள்கை விளக்க அணி துணை செயலாளர் என்.எஸ்.அழகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மார்க்கெட் கணேசன் வரவேற்று பேசினார்.
இதில், ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு பேசுகையில், ம.தி.மு.க.வில் உழைப்பவர்களுக்கு பதவி, பட்டம் நிச்சயம் கிடைக்கும். இந்த இயக்கம் தேவை என்ற ஆதங்கத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.
மின் தட்டுப்பாடு
கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாடு முழுவதும் ராமநவமி விழாவின் போது பிரச்சினை எழுந்துள்ளது. மதவாத அரசியலை தூக்கி எறிய வேண்டும்.
மத்திய அரசின் தவறான கொள்கை முடிவால் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால், இதனை மறைத்து தவறான பிரசாரத்தில் பா.ஜ.க. ஈடுபட்டு வருகிறது. ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக இல்லாமல், பா.ஜ.க.வின் கவர்னராக செயல்படுகிறார்
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு புதிய விண்ணப்ப படிவத்தினை துரை வைகோ வழங்கினார். கூட்டத்தில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை முருகன், மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல, திருவெண்காடு அருகே பெருந்தோட்டம் கிராமத்திற்கு வந்த துரை வைகோ அங்கு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின்னர் கொரோனா அலை மற்றும் மழை-வெள்ள பாதிப்புகளை தனது திறமையால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறம்பட சமாளித்தார் என்றார்.
பேட்டியின்போது அரசியல் ஆய்வு மைய குழு உறுப்பினர் வக்கீல் செந்தில்செல்வன், மாநில துணை பொதுச் செயலாளர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் பாபுராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.