விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 45). கூலி தொழிலாளியான இவர் தனது குடும்பத்தினர் மற்றும் பக்கத்து ஊர்களை சேர்ந்த உறவினர்களுடன் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தார்.
அதன்படி ஆனந்த் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலை 4.30 மணியளவில் ஒரு வேனில் திருநள்ளாறு நோக்கி புறப்பட்டனர். வேனை கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்த பவித்திரன்(25) என்பவர் ஓட்டினார்.
அந்த வேன் கடலூர் முதுநகர் அடுத்த செம்மங்குப்பம் சிதம்பரம்-கடலூர் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தறிகெட்டு ஓடியவாறு, சாலையோர பள்ளத்தில் பாய்ந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இது பற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் மற்றும் கடலூர் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாகு தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வேனில் பலத்த காயங்களுடன் சிக்கி இருந்த கிருஷ்ணாபுரம் அரவிந்த் (30), ஷாலினி (24), சீதாலட்சுமி (31), சிவனேஷ்வா் (2), ஆனந்தன் மனைவி காஞ்சனா (47), கண்டமங்கலம் அருண் (20), செல்வி (42), வானமாதேவி நாராயணன் (22), ஜான்சிராணி (20), வளர்மதி (39), பெருமாள் (42), சந்தோஷ் (22), கே.என்.பேட்டை புவனேஸ்வரி (54), ரேஷ்மா (6), விழுப்புரம் மருதூர் அரவிந்த் (22), மணிஷா (13) ஆகிய 16 பேரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் இந்த விபத்தில் வேனில் வந்த ஆனந்த் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வேனை ஓட்டிவந்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
விபத்து குறித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக கடலூர்- சிதம்பரம் சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.