மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரிசங்கு, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ் மற்றும் ஆசிரியர்கள் பள்ளியில் சேராமல் மாணவர்கள் யாரும் விடுபட்டு இருக்கிறார்களா? என்று கொள்ளிடம் பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது நேபாளத்தை சேர்ந்த சிலர் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே ஆற்றங்கரையோரம் குடிசை வீடுகளில் வசிப்பதும், அவர்களது குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்-சிறுமிகள் ஏழ்மையின் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் இருந்ததும், அவர்களில் சிறுவன் ஒருவன் அங்குள்ள கடை ஒன்றில் வேலை பார்த்ததும் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து அவர்களது பெற்றோர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த சிறுவர்-சிறுமிகளை மீட்டு கொள்ளிடம் துளசேந்திரபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சேர்த்து கல்வி கற்க நடவடிக்கை எடுத்தனர்.