நெல்லிக்குப்பம் அருகே, உள்ள வாழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி. இவருடைய கூரை வீடு நேற்று அதிகாலை 5 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, அலறியடித்தபடி வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார்.
இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும், அவர்களால் முடியவில்லை. இதுபற்றி அறிந்து வந்த நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலர் சிவா தலைமையிலான வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சேதமானது. இதேபோல் அதேஊரைச் சேர்ந்த ஜெயா என்பவர் கீற்று கொட்டகையில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். அந்த கடையும் நேற்று அதிகாலை தீப்பற்றி எரிந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. ஒரே ஊரில் கூரை வீடு மற்றும் பெட்டிக்கடை அடுத்தடுத்து தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தீவிபத்துக்கான காரணம் குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.