பண்ருட்டி அருகே, திருவாமூர் கிராமத்தில் பழமைவாய்ந்த திருநாவுக்கரசர் கோவில் உள்ளது. சைவ நாயன்மார்கள் ஆன நால்வரில் சுந்தர் (அப்பர்) பிறந்து வாழ்ந்த ஊரான இங்கு ஆண்டுதோறும் சித்திரை மாதம் குருபூஜை விழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குருபூஜை விழா கடந்த 24-ந்தேதி தொடங்கியது.
அன்றைய தினம் திருக்கைலாய பரம்பரை தருமை ஆதீனம் இருபத்தி ஏழாவது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமி கோவிலுக்கு வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
முன்னதாக காலையில் சிவ பூஜை, கணபதி ஹோமம், மகா தீபாராதனை, மகேஸ்வர பூஜைகளுடன் திருநாவுக்கரசு நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கடந்த 25-ந்தேதி திலகவதியார் திருநாள் திருநாவுக்கரசு தம்பிரான் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருவாடுதுறை ஆதீனம் இருபத்தி நாலாவது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமி கலந்துகொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
தொடர்ந்து சிவச்சந்திரன் தலைமையில் அப்பர் சுவாமிகளின் அருள் வாழ்வு உணர்த்துவது சமூகக் கட்டமைப்பு மேன்மையாய் என்பது குறித்து பேராசிரியர் சாமி, கிருஷ்ணமூர்த்தி, செல்வகுமார் ஆகியோரும் உணர்வு என்பது குறித்து பொன்னம்பலம், முருகன் ஆகியோரும் பேசினர்.
நேற்று முன்தினம் நடந்த சிறப்பு குரு பூஜையில் காசி மடத்து இணை அதிபர் சபாபதி தம்பிரான் சுவாமி கலந்து கொண்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் வசந்தம் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.