சிதம்பரம் அம்பேத்கர் நகரில் 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாலமான் வாய்க்கால் கரையோரம் நீர்நிலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதி மக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தனர்.
இதற்கிடையே அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று காலை சிதம்பரம் காந்தி சிலை அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், தங்கள் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றக் கூடாது, மாற்று இடம் கொடுத்து விட்டு தான் அகற்ற வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து மாற்று இடம் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.