0 0
Read Time:2 Minute, 42 Second

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை அகற்றிவிட்டு 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தீ விபத்து தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால், நோயாளிகள் இன்னலுக்கு ஆளானதாகவும், மருத்துவர்கள், செவிலியர்கள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அதிமுக சார்பில் எம்.எல்.ஏ.க்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு ஆறுதல் தெரிவித்ததாகவும் கூறிய அவர், வரும் காலங்களில் மருத்துவமனைகளில் இதுபோன்ற விபத்துகள் நிகழாதவண்ணம் அனைத்து மருத்துவமனை நிர்வாகங்களுக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், விபத்து நடந்த 10 நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார். மேலும், முதலமைச்சரின் உத்தரவின்பேரில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியதால் 128 பேரின் உயிர் காப்பற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை என குற்றம்சாட்டிய மா.சுப்பிரமணியன், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து நடந்த கட்டடத்தை அகற்றி, 65 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %