சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக தொகுப்பூதிய ஊழியர்களாக பணியாற்றி வந்த 205 ஊழியர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு துணைவேந்தர் இல்லாததால், பதிவாளர் (பொறுப்பு) சீதாராமன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் தொகுப்பூதிய ஊழியர்கள் நேற்று காலை துணைவேந்தர் கதிரேசனை சந்தித்து தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி முறையிட்டனர்.
அதற்கு அவர், உங்களுக்கு மே மாதம் இறுதி வரை தான் பணி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு உங்களுக்கு பல்கலைக்கழகத்தில் வேலை கிடையாது. பணி நீட்டிப்பு குறித்து அரசு தான் முடிவெடுக்க முடியும் என கூறியதாக தெரிகிறது.
இதனால் தங்களது வேலையே கேள்விக்குறியாகியுள்ள நிலையில் தொகுப்பூதிய ஊழியர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பூமா கோவில் அருகே சாலையோரம் அமர்ந்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.