0 0
Read Time:3 Minute, 51 Second

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் தலைமையில் நேற்று நடந்தது. வேளாண் இணை இயக்குனர் சேகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:-

கோபி கணேசன்(காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத் தலைவர்): கோடை மழையால் பாதிக்கப்பட்ட உளுந்து மற்றும் பயறு வகை பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும். தனியார் உரக்கடைகளுக்கு சென்றால் தேவையில்லாத கரைசல் போன்ற வேறு மருந்துகளை வாங்கச்சொல்லி விவசாயிகளை கட்டாயப்படுத்துவதை தடுக்க வேண்டும்.

துரைராஜ்: மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.8.7 கோடி திட்ட மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது, இதனை கண்காணிக்க அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளை கொண்டு கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும். தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலை திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் ஆய்வுக்குழுவில் விவசாயிகளும் இடம்பெற வேண்டும்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் எண்ணெய் நிறுவனங்கள் விளைநிலங்களை சேதப்படுத்தி குழாய் பதிப்பதை நிறுத்தி சாலையோரம் குழாய்களை பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும்.

வரதராஜன்: இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேந்திரன்: மயிலாடுதுறை மாவட்டத்தில் பம்புசெட் மூலம்தான் அதிக அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. முன்னறிவிப்பு இன்றி செய்யப்படும் மின்தடையால் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறுவை சாகுபடிக்கு தட்டுப்பாடு இன்றி மும்முனை மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜாராமன்: பொதுப்பணித்துறை மூலம் தூர்வாரும் பணிகள் பற்றி விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக தூர்வார வேண்டும்.

ராமலிங்கம்: விவசாயிகள் தங்கள் உளுந்து, பயறுகளை விற்பனை செய்ய தேவையான சாக்குகளை கொள்முதல் நிலையத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் விவசாயம் சார்ந்த அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %