கொள்ளிடம் அருகே, வேட்டங்குடி ஊராட்சியில், பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வேட்டங்குடி-கூழையார் சாலையை மேம்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது.
இந்தப்பணி கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. ஆனால், இந்த சாலை தரமானதாக அமைக்கப்படாததை கண்டித்தும், குடியிருப்புகளுக்கு அருகே சவுடு மண் குவாரி அமைய உள்ளதை கண்டித்தும் வெள்ளகுளம், வேட்டங்குடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பொக்லின் எந்திரம் மற்றும் டிராக்டர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்டங்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், குடியிருப்புகளுக்கு அருகே சவுடு மண் குவாரிக்கு அனுமதி அளிக்கக்கூடாது. புதிதாக அமைக்கப்பட்ட சாலையை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கிராம நிர்வாக அலுவலர் மாரியம்மாளிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.