தரங்கம்பாடி,ஏப்.30:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். சுகாதாரத்துறை துணை இயக்குனர் குமரகுருபரன், வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திக் சந்திரகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன் வரவேற்றுப் பேசினார்.
இதில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இம்மருத்துவமுகாமில் சிறப்பு மருத்துவ அலுவலர்கள் வருகைதந்து தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், டெங்கு -சிக்கன்குனியா விழிப்புணர்வு விளக்க உரை, ஸ்கேன், இசிஜி, பொது மருத்துவம், மகளிர், குழந்தைகள், எலும்பு முறிவு, காது -மூக்கு -தொண்டை, கண் பிரிவு, பல் பிரிவு, இயன்முறை, சிகிச்சை பிரிவு, சித்தா, ஆயுர்வேதா, இனானி, யோகா, நியூட்ரிசன் மற்றும் ரத்த பரிசோதனை உட்பட வட்டார பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை மற்றும் மருத்துவம் மருத்துவ குழுவினரால் பார்க்கப்பட்டது. அங்கன்வாடி சார்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு தானியங்கள் விளக்க படங்கள் மற்றும் பொருட்காட்சி வைக்கப்பட்டிருந்தனர்.
முகாமில் இருதயநோய், சர்க்கரை நோய், கண் பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கர்ப்பிணி பெண்களுக்கு ஆய்வக பரிசோதனை நடைபெற்றது. முகாமில் தொழுநோய், யானைக்கால் உடையவர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு பெட்டகங்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்களை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ. ராமலிங்கம், எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் ஆகியோர் வழங்கினர்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யும் இடங்களை ஆய்வு மேற்கொண்டார். முகாம்களில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து இலவசமாக மருந்து- மாத்திரைகள் பெற்றுக்கொண்டு முகாம்களில் கலந்து கொண்டவர்கள் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களும் மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ள செய்யும்படி அறிவுறுத்தினர்.
இதில், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, செம்பை ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், ஒன்றிய துணை தலைவர் மைனர் பாஸ்கர், பள்ளி தலைமையாசிரியர் ரமா, மாவட்ட குழு உறுப்பினர் வெண்ணிலா தென்னரசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணி, மருத்துவர்கள் அரவிந்தநாதன், செல்வம், ஆயிஷா பீவி, சித்தா மருத்துவர் நந்தினி, வட்டார சுகாதார ஆய்வாளர்கள் ஜெயக்குமார், பழனி தாஸ், சீனிவாச பெருமாள், அருண், கிராம சுகாதார செவிலியர் வசுமதி, விஜயலட்சுமி, குமுதா, ஐ சி டி சி ஆலோசகர் கோமதி மற்றும் 20-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் செவிலியர்கள் மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.
முடிவில், செம்பனார்கோவில் ஊராட்சி மன்ற தலைவர் க.தி.விஸ்வநாதன் நன்றியுரையாற்றினார்.