மயிலாடுதுறை மாவட்டம். செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், செம்பனார்கோயில் கிராம ஊராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில், மே 1 தொழிலாளர் தினத்தையொட்டி செம்பனார்கோயில் ஊராட்சி மன்ற தலைவர் க.தி. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில், சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா கலந்து கொண்டார்.
இக்கிராம சபை கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்துக் கொண்டு பேசியதாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அணைக்கிணங்க இச்சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது. ஆண்டுக்கு நான்கு முறை கிராமசபை கூட்டம் நடைபெற்று வந்ததை, ஆறு முறையாக மாற்றி நடத்திட நம்முடைய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 தொழிலாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் – 2 அண்ணல் காந்தியடிகள் பிறந்த தினம் ஆகிய நாட்களில் நடைபெறும். வரக்கூடிய 4 கிராம சபை கூட்டம், இனி வருடத்திற்க்கு 6 கிராம சபை கூட்டங்களாக நடத்தப்படும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தின் வாயிலாக 16 விதமான கூட்டப் பொருள்கள் கிராம பொது மக்களின் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கிராம சபை கூட்டங்களின் முக்கிய நோக்கம் ஊராட்சிகளில் மேற்க்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மக்கள் அறிந்து கொள்ள நடத்தப்படுகிறது. சாலை வசதிகள், குடிநீர், மின் இணைப்பு, கழிப்பறை வசதிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வரப்பெறும் புகார்கள் மற்றும் கோரிக்கைளுக்கு தீர்வு காணுதல், பள்ளி கட்டடங்கள் போன்றவைகள் குறித்து நன்றாக அறிந்துக் கொள்ளலாம்.
பொது மக்களின் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு விரைந்து நிறைவேற்றி தர நடவடிக்கைகள் எடுக்கப்படும். மகளிர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் சுய உதவிக் குழு உருவாக்கப்பட்டது மகளிர் சுய உதவிக்குழுவில் இணைந்து தொழில் தொடங்க, தாட்கோ, வாழ்ந்து காட்டுவோம் போன்ற எண்ணற்ற திட்டங்களில் சேர்ந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இக்கிராமசபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சிதுறை இணை இயக்குநர் எஸ்.முருகண்ணன், செம்பனார்கோயில் ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் பி.பாஸ்கரன், மகளிர் திட்ட இயக்குநர்/இணை இயக்குநர் கவிதபிரியா, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சேகர், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் நாராயணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மஞ்சுளா, ஜெ.விஜயலட்சுமி, தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கிராம மக்கள் ஆர்வமுடன் பங்கேற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் ஆகியோர் கிராம பொது மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.