குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வழுதலம்பட்டு ஊராட்சியில் மே தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகத்தில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டம் நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் 2 முறையாக வழுதலம்பட்டு ஊராட்சியில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன்.
குள்ளஞ்சாவடி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிராமம்தோறும் சென்று பொதுமக்கள், வணிகர்களை சந்தித்து பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க பாடுபடுவதோடு, குறிஞ்சிப்பாடியை பிளாஸ்டிக் இல்லா ஒன்றியமாக மாற்றவேண்டும்.
முன்னதாக வழுதலம்பட்டு ஊராட்சி மக்கள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் வீட்டுமனைப்பட்டா மற்றும் இணைப்பு சாலை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதி கேட்டு மனு கொடுத்தனர். கூட்டத்தில் கடலூர் மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சதீஷ்குமார், சுப்பிரமணியன், ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.