சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி ஊராட்சி அள்ளூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா தலைமை தாங்கினார். துணை தலைவர் கோமேதகம் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
இதில் அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஊராட்சி செலவு கணக்கு குறி்த்த விவரங்களை கிராம மக்கள் கேட்டனர். ஆனால் அதிகாரிகள் செலவு கணக்குகளை காண்பிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து அங்குள்ள சேத்தியாத்தோப்பு- சிதம்பரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.
இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.