0 0
Read Time:3 Minute, 4 Second

காட்டுமன்னார்கோவில், அருகே கண்டமங்கலம் ஊராட்சியில் மே தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சிவகாசி கலியமூர்த்தி தலைமை தாங்கினார்.

காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா, கிராம நிர்வாக அலுவலர் ராஜம், ஊராட்சி செயலாளர் சங்கர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்வது குறித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா திடீரென தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரனை சரமாரியாக தாக்கினார். இதைபார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இது குறித்த தகவலின் பேரில் சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம், காட்டுமன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யா ஆகிய இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவருக்கும், ஊராட்சி மன்ற துணை தலைவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதில் ஊராட்சி மன்ற தலைவருக்கு ஆதரவாக மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன் உள்பட பலரும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ரவிச்சந்திரனை சரண்யா தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனிடையே ஊராட்சி மன்ற துணை தலைவர் சரண்யாவை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தினர்.

இது குறித்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரண்யாவை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %