சென்னை, ராயப்பேட்டை வெஸ்ட் காட் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் செங்கல்பட்டு மாவட்டம் அண்ணாநகரை சேர்ந்த மாரியப்பன் (வயது 33) என்பவர் கடந்த மாதம் 29-ந் தேதி வேலைக்கு சேர்ந்தார். அவர் வேலைக்கு சேர்ந்த முதல் நாளிலேயே, இரவு பணி முடியும் நேரத்தில் பெட்ரோல் விற்பனையில் வசூலான ரூ.14 ஆயிரத்துடன் திடீரென மாயமானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெட்ரோல் நிலைய மேலாளர், இது தொடர்பாக அண்ணாசாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பெட்ரோல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி மூலம் மாரியப்பனின் தோற்றத்தை போலீசார் அடையாளம் கண்டனர். பெட்ரோல் நிலையத்தில் அவர் வேலைக்கு சேரும்போது அளித்திருந்த முகவரிக்கு சென்று விசாரித்தனர்.
ஆனால் மாரியப்பன் அந்த வீட்டை காலி செய்துவிட்டு வேறொரு வீட்டுக்கு குடிபெயர்ந்துவிட்டது தெரிந்தது. பின்னர் அந்த முகவரியை கண்டுபிடித்து போலீசார் அங்கு சென்று மாரியப்பனை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், மாரியப்பன் குடிபோதைக்கு அடிமையானவர் என்பதும், பெட்ரோல் நிலையத்தில் திருடிய பணத்தில் 12 ஆயிரத்து 900 ரூபாயை மது அருந்தியே செலவு செய்திருப்பதும் தெரிய வந்தது.
போலீசார் கைது செய்த போதும் அவர் குடிபோதையில் இருந்துள்ளார். அப்போது அவர், தன்னை கைது செய்ய வந்த போலீசாரை பார்த்து, “இதெல்லாம் பெரிய விஷயமா?.
இந்த சின்ன விஷயத்துக்காக என்னை தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களே?” என்று கேட்டு போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தார். பின்னர் போலீசார் கைதான மாரியப்பனை சென்னை அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.