சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 ஆண்டுகளாக 205 பேர் தொகுப்பூதிய ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தற்போது ரூ.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை ஊதியம் பெற்று வருகின்றனர்.
பணி நிரந்தரம் செய்யப்படாததால் இவர்களுக்கு மே மாதம் 31-ந் தேதியுடன் வேலை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தொகுப்பூதிய ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும், பணி நீக்கம் செய்யக்கூடாது என வலியுறுத்தியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று தொகுப்பூதிய பெண் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.