பூந்தமல்லி, சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், அருணாச்சலம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் தாட்சாயிணி (வயது 34). இவர், நகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், ரம்ஜான் பண்டிகையையொட்டி நகை கடையில் பணிபுரியும் மேலாளர் சாரா என்பவரை பிரியாணி விருந்துக்கு வீட்டுக்கு அழைத்தார்.
அதன்படி சாரா, தனது நண்பர் சையத் முகமது அபுபக்கர்(27) என்பவருடன் தாட்சாயிணி வீட்டுக்கு சென்றார். அங்கு இருவருக்கும் பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. பின்னர் அங்கிருந்து இருவரும் சென்று விட்டனர்.
அதன்பிறகு சிறிது நேரம் கழித்து தாட்சாயிணி, அறையில் இருந்த பீரோ திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை சோதனையிட்ட போது அங்கு வைத்து இருந்த தங்கம் மற்றும் வைரம் 3 சங்கிலிகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீடு முழுவதும் தேடியும் கிடைக்காததால் தனது வீட்டுக்கு கடைசியாக வந்து சென்ற தனது மேலாளர் சாராவுடன் வந்த சையத் முகமது அபுபக்கர் மீது சந்தேகம் ஏற்பட்டது. மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், பிரியாணி விருந்துக்கு வந்த போது வீட்டில் இருந்த நகைக்கு ஆசைப்பட்டு தங்க, வைர நகைகளை திருடி, பிரியாணியுடன் சேர்த்து வாயில் போட்டு விழுங்கி விட்டதாக தெரிவித்தார்.
எனினும் அவர், உண்மையிலேயே நகையை விழுங்கினாரா? என கண்டறிய அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் நகைகள் இருப்பது உறுதியானது. அந்த நகையை வெளியே எடுக்க அவருக்கு இனிமா கொடுத்தும், நகைகள் வெளியே வரவில்லை.
இந்தநிலையில் நேற்று சையத் முகமது அபுபக்கர் இயற்கை உபாதையை கழித்த போது அவர், தாட்சாயிணி வீட்டில் திருடி விழுங்கிய தங்க, வைர நகைகள் வெளியே வந்தது. பின்னர் அதனை விருகம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தார். போலீசார் அந்த நகைகளை தாட்சாயிணியிடம் ஒப்படைத்தனர்.
மேலும் இதுகுறித்து நடவடிக்கை ஏதும் தேவையில்லை. நகைகள் மட்டும் கிடைத்ததே போதும் என தாட்சாயிணி கூறியதால் சையத் முகமது அபுபக்கரிடம் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.