திமுக ஆட்சி அமைந்து ஒராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ‘மக்களுக்கு பயன் தராத துன்பங்கள் நிறைந்த துயரமான ஆட்சி திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள்’ என குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தலின் போது, திமுக கொடுத்த பொய்யான, போலியான, நிறைவேற்ற முடியாத, சாத்தியமற்ற வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்ததன் விளைவாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சி துரதிர்ஷ்டவசமாக அமைந்துவிட்டதாக தெரிவித்துள்ள அவர், மக்கள் இன்பங்களை மறந்து துன்பங்களை மட்டுமே அனுபவித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், ‘திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவித்து, மேடைக்கு மேடை பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி அமைந்து ஒராண்டாகியும் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை’ என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
இதேபோல, 30 வயதுக்கு உட்பட்ட மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒராண்டாகியும் திமுக அரசு இதுகுறித்து வாய் திறக்கவில்லை என சாடியுள்ள அவர், மகளிர் எதிர்பார்த்த முக்கியமான வாக்குறுதியான மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படாததால், மகளிர் அதிர்ப்தியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடி வெல்லும் என்பதற்கேற்ப அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.