கடலூர், தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் பிளஸ்-2 தேர்வு தொடங்கிய நிலையில், நேற்று எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 445 பள்ளிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 489 மாணவர்கள், 17096 மாணவிகள் என 35 ஆயிரத்து 585 மாணவர்கள் எழுத ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக 152 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இது தவிர 920 தனித்தேர்வர்கள் தேர்வு எழுத 7 மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கும் என்று அறிவித்தாலும் மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு 9 மணிக்கே வந்தனர். தொடர்ந்து அவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்தனர்.
சில பள்ளிகளில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. அதன்பிறகு 9.45 மணிக்கு தேர்வு மையத்திற்குள் மாணவர்கள் சென்றனர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து குறிப்பிட்ட மணி அடித்ததும் காலை 10.15 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுத தொடங்கினர்.
மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. இந்த தேர்வை 35 ஆயிரத்து 226 மாணவர்கள் எழுதினர். 1279 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மாணவர்கள் சொல்வதை எழுதும் ஆசிரியர்கள் மூலம் தேர்வு எழுதினர். முன்னதாக தேர்வு மையத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி, மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
இது தவிர பறக்கும் படை அதிகாரிகளும், நிலை படை அலுவலர்களுக்கும் தேர்வு மையங்களுக்கு திடீரென சென்று மாணவர்கள் யாராவது காப்பி அடித்து எழுதுகிறார்களா? என்று கண்காணித்தனர். முதல் நாள் தமிழ் தேர்வு எளிதாக நடந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தேர்வு மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையத்திற்குள் வெளிநபர்கள் செல்வதை தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.