மயிலாடுதுறை, தருமபுரம் ஆதீன குருமூர்த்தத்தில் 5 கலசங்கள் திருட்டுப்போனது. இது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத்தில் காவிரிக்கரை செல்லும் திருமஞ்சன வீதியில் ஆதீனகர்த்தர்களாக இருந்து மறைந்தவர்களை அடக்கம் செய்யப்பட்ட குருமூர்த்தம் என்ற நினைவிடம் அமைந்துள்ளது. இந்த குருமூர்த்தத்தில் கடந்த 2-ந் தேதி 20-வது குருமகாசன்னிதானத்துக்கு குருபூஜை நடந்தது.
மறுநாள் ஆதீன ஊழியர்கள் குருமூர்த்தத்துக்கு சென்றனர். அப்போது அங்கு குருமூர்த்தத்தின் விமானத்தில் இருந்த 2 கலசங்கள், முகப்பு பகுதியில் உள்ள நுழைவு வாயிலின் மேல் பகுதியில் இருந்த கலசங்கள் என மொத்தம் 5 கலசங்கள் திருட்டுப்போய் இருந்தன.
செம்பு மற்றும் பித்தளை ஆகிய உலோகங்களால் செய்யப்பட்ட இந்த 5 கலசங்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது. இது குறித்து ஆதீன பொதுமேலாளர் கோதண்டராமன், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரம் ஆதீன குருமூர்த்தத்தில் 5 கலசங்கள் திருட்டுப்போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.