0 0
Read Time:4 Minute, 48 Second

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் நவீன தொழில்நுட்ப முறையில் பனைவெல்லம், பனங்கற்கண்டு மற்றும் இதர பனைவெல்ல மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார்.

தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் தலைமை கூட்டுறவு இணையமாகும். பனைத்தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதையே பிரதான நோக்கமாக கொண்டு இந்த இணையம் செயல்பட்டு வருகிறது.

பனைத்தொழில் மற்றும் பனைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை வாயிலாக 2021-22-ம் நிதியாண்டில் இயற்கை சுவை நீரான பதநீரை கொண்டு தயாரித்திடும் பனைவெல்லத்தின் உற்பத்தியை அதிகப்படுத்திடும் வகையில் நவீன முறையில் பனைவெல்லம் உற்பத்தி செய்யும் பயிற்சி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் இந்த பயிற்சி 50 பேருக்கு 10 நாட்கள் பனைவெல்லம் நவீன முறையில் உற்பத்தி செய்யும் பயிற்சி வழங்கவும், பயிற்சி முடிவடைந்ததும், அவர்கள் சுயமாக தொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளவேண்டி பனைவெல்லம் தயாரிப்பதற்கு தேவையான கொப்பரை, குண்டான், பதநீர் வடிக்கட்டும் ஜல்லிக்கரண்டி, அகப்பை, பனைவெல்ல அச்சு மற்றும் இதரவைகள் இலவசமாக வழங்கி பனைத்தொழிலையும் பனைத்தொழிலாளர்களையும் அரசு ஊக்குவித்துள்ளது.

10 நாட்கள் நடைபெறும் பயிற்சியில் முதல் 7 நாட்கள் தத்துவார்த்த படிப்பும், எஞ்சிய 3 நாட்கள் பட்டறிவு பயணமும் மேற்கொண்டு பயிற்சியாளர்களுக்கு செய்முறை வீதம் கற்பிக்கப்படுகிறது. பனை பொருட்களின் அடிப்படை பொருள் பதநீர் ஆகும், பதநீரை கொண்டு பனைவெல்லம், பனங்கற்கண்டு, புட்டுவெல்லம் போன்ற உணவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. பனைவெல்லம் மற்றும் பனங்கற்கண்டு மிக அதிக மருத்துவ குணம் அடங்கிய பொருட்களாகும்.

மேலும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்துடன் இணைந்து பதநீரில் இருந்து மற்ற இயற்கை மருத்துவம் போன்ற பொருட்களை தயாரிக்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறினார். தொடர்ந்து பனைவிதைகள் அதிகமாக நட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அனுமதியின்றி பனை மரங்களை வெட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் கூறினார்.

தொடர்ந்து பனைவெல்லம் தயாரிப்பதற்கு தேவையான கொப்பரை, குண்டான், பதநீர் வடிக்கட்டும் ஜல்லிக்கரண்டி, அகப்பை, பனைவெல்ல அச்சு உள்ளிட்ட உபகரணங்களை பயிற்சியில் கலந்து கொண்டு சுய தொழில் செய்வோருக்கு கலெக்டர் வழங்கினார்.

இதில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைசெல்வன், தமிழ்நாடு மாநில பனைவெல்ல தும்பு விற்பனை கூட்டுறவு இணை மேலாண்மை இயக்குனர் ச.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் தி.கண்ணன், அருள்பாபு, பிரசன்னகுமார், மண்டல பனைபொருள் பயிற்சி நிலைய முதல்வர் கணபதி மற்றும் அரசு அலுவலர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %