கேரள மாநிலத்தில் பரவி வரும் தக்காளி வைரசுக்கும், தக்காளிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் புதிய வகை நோய்தொற்று பரவி வருகிறது. தக்காளி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த நோய் தொற்று குறித்து தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தக்காளி வைரஸ் என்பது ஏற்கனவே சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஏற்படும் ஒரு புதிய வகை தொற்று என்றும், நல்ல தண்ணீரில் உருவாகும் கொசுவினால் இந்த தொடர் பரப்புவதாகவும் தெரியவந்துள்ளது என்றார்.
தோலில் சிவப்பு நிற புள்ளிகள் தென்படுவதால் இதற்கு தக்காளி வைரஸ் என்று பெயரிடப்பட்டு உள்ளதாகவும் தக்காளி வைரஸ்க்கும் தக்காளிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எந்தவகை நோய்த்தொற்று வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக மருத்துவத்துறை தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.