கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தனியார் பஸ்களும் அதிக அளவில் இயக்கப்படுகிறது. ஆனால் பஸ் நிலையத்தில் இட நெருக்கடி உள்ளதால், அரசு மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்ல சிரமமாக உள்ளது.
பஸ் நிலையம் அருகில் பூ மார்க்கெட், பான்பரி மார்க்கெட், ரெயில் நிலையம் உள்ளதால், மக்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவர்களும் பஸ் நிலையத்திற்குள் காலை, மாலை குவிந்து வருவதால், போதிய இடவசதியின்றி மாணவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதை தவிர்க்க கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி புதிய கலெக்டர் அலுவலகம் மேற்கு பகுதியில் கரும்பு ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக 18½ ஏக்கர் நிலம் தற்போது உள்ள மாநகராட்சி நிர்வாகத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 26-ந்தேதி ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ரூ.36 கோடி நிதி ஒதுக்க நிர்வாக அனுமதியும் பெறப்பட்டது. அதன்படி புதிய பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது. மேலும் சென்னையில் இருந்து வந்த அதிகாரிகள், பஸ் நிலையம் அமைப்பதற்கான வரைபடம் தயாரித்தல், நில அளவீடு பணிகளை செய்தனர்.
தொடர்ந்து ஆணையாளர் தலைமையில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட குழுவினர், அந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைத்தால், வாகன போக்குவரத்து எப்படி இருக்கும் என்று ஆய்வு மேற்கொண்டனர். மாநகரில் பல்வேறு இடங்களில் வாகனங்கள் கணக்கெடுப்பு பணி நடந்தது.
இந்நிலையில், இந்த இடத்தில் புதிய பஸ் நிலையம் அமையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கலெக்டர் அலுவலகம் அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால் பஸ் நிலையம் இருந்தால், அதை சுற்றியுள்ள பகுதிகள் வளர்ச்சி அடைய வேண்டும். அதற்கான சூழல் இங்கு இல்லை. ஆகவே புதிய பஸ் நிலையம் அமைக்க உகந்த இடத்தை தேர்வு செய்து வருகிறோம் என்றார்.
இதன் மூலம் புதிய பஸ் நிலையம் வேறு இடத்துக்கு மாற்றப்படுவது உறுதியாகி உள்ளது. அதற்கான இடத்தை விரைவில் தேர்வு செய்து, பணிகளை தொடங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.