மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே கடலோர நடுகொட்டாயமேடு மீனவ கிராமம் உள்ளது. இங்கு 325 குடும்பங்களை சேர்ந்த 1,500 பேர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்த அனைவருக்கும் மீன்பிடி தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.
இங்கு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியை தவிர வேறு எந்த பள்ளியிலும் சேர்ப்பதில்லை என முடிவு செய்து உள்ளனர்.
இதற்காக கூட்டம் போட்டு ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர். குழந்தைகளை வேறு பகுதியில் உள்ள பள்ளிகளில் சேர்க்க விரும்பவில்லை என கிராம மக்கள் கூறுகிறார்கள்.
மேலும் இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்து அந்த பள்ளியில் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்த்து வருகிறார்கள். தற்போது இந்த பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 90 ஆக உள்ளது.
தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்த நிலையில் பள்ளியின் மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மை குழு மாவட்ட திட்ட அலுவலர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயபாரதி வரவேற்றார். கொள்ளிடம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி, பெற்றோர்கள் மனோகரன், வில்வபதி, சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் கலந்து கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட பள்ளி மேலாண்மை குழு தலைவர் நித்யா, துணைத் தலைவர் தேவகி மற்றும் 18 உறுப்பினர்களுக்கு சான்றுகளை வழங்கி பேசினார். முடிவில் ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.